வனமும் வனம் சார்ந்தவை மட்டுமே அறிந்த டார்ஜன் என்னும் கலைப்படைப்பு கதாபாத்திரம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அந்தக் கதாபாத்திரம் போலவே நிஜ வாழ்க்கையில் 41 ஆண்டுகள் அடர் வனத்தில் விலங்குகளுடன் வாழ்ந்த ஒரு மனிதர் பற்றிதான் இங்கே சுருக்கமாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
வியட்நாமின் காடுகளில் வெளியுலக வாசனையே இல்லாமல், அதுவும் மனிதர்களில் பெண் பாலினம் குறித்த புரிதலே இல்லாமல் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் 41 ஆண்டுகளாக ஒரு மனிதர் வாழ்ந்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா..? - அப்படி ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார்.
'நிஜ டார்ஜன்' என அழைக்கப்படும் அவரின் பெயர் ஹோ வான் லாங். தற்போது 49 வயதாகும் ஹோ வான், விவரம் தெரியாத சிறுவயதில் வியட்நாமின் நகர பகுதிகளில்தான் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 1972-ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில், ஹோ வான் குடும்பம் முற்றிலும் சிதைந்துள்ளது. அவரின் தாயும், உடன் பிறந்தவர்கள் இருவரும் அந்தத் தாக்குதலில் பலியாகினர். அதன்பின்னர் விவரம் தெரியாத ஹோ வான் மற்றும் அவரின் மற்றொரு சகோதரரை தூக்கிக்கொண்டு நாகரிக வாழ்க்கையாக நினைத்துக்கொண்டிருந்த நகர வாழ்க்கையை விட்டு வெளியேறி குவாங் நங்கை மாகாணத்தின் டே டிரா மாவட்டத்தில் உள்ள அடர் வனத்தில் குடியேறியிருக்கிறார் அந்தக் குழந்தைகளின் தந்தை.
இந்த 41 ஆண்டு வாழ்க்கையில் முற்றிலும் வனத்தில் வாழ்ந்து, அங்கு கிடைத்த தேன், பழம் மற்றும் வன உயிரினங்களை சாப்பிட்டு, தங்குமிடங்களை கட்டியெழுப்பி தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டுள்ளனர் அந்த மூவரும்.
நான்கு தசாப்தங்களில், அவர்கள் மற்ற ஐந்து பேரை மட்டுமே பார்த்துள்ளார்களாம். ஒவ்வொரு முறையும் ஒருவர் கண்ணில் படும்போது தங்கள் வசித்த பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையேதான் 2013-ம் ஆண்டு இவர்களை வன வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து அருகில் உள்ள கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். அங்கு, அவர்கள் மெதுவாக நாகரிக வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது காட்டுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசிக்க்கும் இந்த குடும்பத்தை அல்வாரோ செரெஸோ என்ற புகைப்படக் கலைஞர் நேரில் சந்தித்து பேட்டியெடுத்துள்ளார்.
அவர்களின் அனுபவம் தொடர்பாக பேசியிருக்கும் அல்வாரோ செரெஸோ, ''ஹோ வான்னின் தந்தை வியட்நாம் போர் முடிந்துவிட்டது என்பதை நம்பவில்லை. அவருக்கு நகரத்துக்கு திரும்புவதற்கான பயம் இருந்ததால் நகரத்துக்கு வரவில்லை. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், காடுகளில் வசிக்கும்போது ஹோ வான்னுக்கு பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது.
இன்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அவரால் வேறுபாடு காண முடிந்த போதிலும், அவர்களுக்கு இடையேயான அத்தியாவசிய வேறுபாட்டை இன்னும் முழுமையாக அறியாமல் இருக்கிறார். லாங்கிற்கு ஒருபோதும் குறைந்தபட்ச பாலுறவு விருப்பம் கூட இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
ஹோ வான் லாங்கின் தந்தை தனது மகன்களிடம் பாலியல் பற்றி ஒருபோதும் சொல்லவில்லை. அவரது தந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கும் வரை ஹோ வான்னின் வாழ்க்கை நன்றாக இருந்தது. தனது தந்தையின் மோசமான மனநிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தமும் பதற்றமும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். தனது முழு வாழ்க்கையையும் காட்டில் கழித்ததால் பல அடிப்படை சமூகக் கருத்துகளைப் புரிந்துகொள்ளவில்லை.
நான் யாரையாவது அடிக்கச் சொன்னால், ஹோ வான் அதைச் செய்வார். நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியாது. ஹோ வான் ஒரு குழந்தை மட்டுமே. அவருக்கு எதுவும் தெரியாது" என்று ஹோ வானின் நிலையை எடுத்து பேசியிருக்கிறார்.