கல்வியறிவு பெறாத கற்கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியதுடன், அவற்றின் தோல்களை உடையாகவும் பயன்படுத்தினர். இப்படி, விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றுக்குச் சிறு தீங்கிழைத்தால்கூட சட்டம் பாய்ந்துவிடுகிறது. மேலும், விலங்கு நல ஆர்வலர்களால் பல உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் பூனையைக் கொன்ற உரிமையாளருக்கு 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுடன், அந்தப் பூனைக்கு நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில், ரூ.9,043 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் நகரமான லில்லியில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1 வயது மதிக்கத்தக்க பூனை ஒன்று, குப்பைத்தொட்டியில் இறந்துகிடந்தது. இதுகுறித்த விசாரணையில், அந்தப் பூனையின் உரிமையாளர் தாம் வளர்த்ததை ஒப்புக்கொண்டார். அந்தப் பூனையின் பெயர் லானா என்பதும், அது ஆட்டிஸக் குறைபாடு கொண்ட தனது மகனைக் கீறிவிட்டது. அந்த ஆத்திரத்தில் அதை அடித்துக் கொன்றுவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இறுதிவிசாரணை நடைபெற்று கடந்த ஜனவரி18-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், வீட்டின் உரிமையாளருக்கு 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் இனிமேல் செல்லப்பிராணிகள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ’அகண்ட பாரதத்தின் முதல்படி அயோத்தி ராமர் கோயில்’ - ம.பி. முதல்வர்!
மேலும், அந்தப் பூனைக்கு இழப்பீடாக 100 யூரோக்கள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.9,043 அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இப்படி, பூனை ஒன்றுக்கு இழப்பீடு வழங்கப்படுவது பிரான்ஸ் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இந்த தீர்ப்பு விலங்குகள் நல அமைப்பினரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கும் பிரான்சின் Society for the Protection of Animals (SPA) என்னும் விலங்குகள் நல அமைப்பின் தலைவரான Jacques-Charles Fombonne, ’அதேநேரத்தில் எந்த சட்ட அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, Poitiers பல்கலை சட்டத்துறைப் பேராசிரியரான Fabien Marchadier என்பவரும், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.