தாய்லாந்தில் இறந்து கிடந்த மான் ஒன்றின் வயிற்றில் 7 கிலோ நெகிழி குப்பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது நன் (Nan) மாகாணம். இங்கு குன் சதான் (Khun Sathan ) தேசிய வனவிலங்குள் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் மான் ஒன்று கடந்த திங்கட்கிழமை இறந்து கிடந்தது. அந்த மானின் உடலில் எந்த காயமோ, கீறல்களோ இல்லை. இதையடுத்து அந்தப் பத்து வயது மானை, கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். அப்போது அதன் வயிற்றில், பிளாஷ்டிக் பைகள், காபி குடித்துவிட்டு வீசி எறிந்த கப்கள், ரப்பர் கையுறைகள், டவல், இரண்டு உள்ளாடைகள் ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் எடை 7 கிலோ.
‘நெகிழி குப்பைகளால்தான் இந்த மான் இறந்திருக்கிறது. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்று இந்த வனவிலங்கு பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத் தொடக்கத்தில் கடல் பசுக் குட்டி ஒன்று நெகிழியை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது