இஸ்ரேல் ஹமாஸ் இடையே 13 ஆவது நாளாக போர் நடந்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். பதிலடியாக காஸாவிற்குள் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை சுமார் 3,450 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காஸா மீது தரைவழித் தாக்குதலைத் தொடுக்க இஸ்ரேல் ராணுவத்தினர் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்த தரைவழித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இரு தரப்பினருக்கும் இடையேயான போரில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காஸாவில் உள்ள அல் அஃஹ்லி மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காஸாவில் உள்ள அல்- குத்ஸ் மருத்துவமனை அருகேவும் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
அதேபோல் இஸ்ரேல் ஹமாஸ் போரை மையப்படுத்தி பல்வேறு வீடியோக்கள் பரவி வருகின்றன. அதில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன் பகுதியில் காகம் ஒன்று கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் கொடியை கழற்றி தரையில் வீசுகிறது.
கொடியை கழற்றி வீசிய பின் அந்த கம்பத்தில் காகம் நின்றுகொண்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், வீடியோக்களை எடுத்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் உள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்கையில், இது இப்போது எடுக்கப்பட்டது அல்ல என தெரிகிறது.
ட்விட்டர் தளத்தில் இதை பதிவிட்டவர் இந்தாண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியே பதிவிட்டுள்ளார். தற்போது போர்ச்சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் தற்போது இந்த வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.