கொரோனா பாதிப்பில் இருந்து பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஜென் நகரில் உள்ள நிறுவனம் ஒன்று, விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்துடன், லக்கிஒ டிரா முறையில் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும் என்றும், தோல்வியுற்றால், உணவு சப்ளை செய்யும் வெயிட்டர் வேலை செய்ய வேண்டும் உள்ளிட்டவை விளையாட்டில் இடம் பெற்றிருந்தது. என்றாலும், இப்போட்டியில் பலர் துணிச்சலுடன் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டில் பங்கேற்ற பணியாளர்களில் அந்தப் பரிசுக்குரிய அதிர்ஷ்டஷாலியாகி இருக்கிறார் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அந்த நபருக்கு சம்பளமும் கொடுத்து, 365 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாக சீன ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், அந்த பரிசுக்குரிய நபர், தனக்குக் கிடைத்த பரிசு உண்மைதானா எனக் கேட்டு தெளிவுபடுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
காரணம், அவருக்கே இந்த பரிசை நம்ப முடியவில்லையாம். தவிர, இப்படிப்பட்ட ஒரு பரிசை தனது ஊழியர் வென்றதை அறிந்த அந்நிறுவன முதலாளி திகைப்புக்குள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அந்நிறுவனத்தின் நிர்வாக அளவிலான பெண் பணியாளரான சென், ”போட்டியில் பரிசு பெற்ற நபருடன் நாங்கள் ஆலோசனை நடத்த இருக்கிறோம். அவர், ’பரிசுக்குப் பதில் பணம் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அனுபவிக்க போகிறாரா’ என்பது பற்றி அவரிடம் கேட்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த பலரும் பரிசு பெற்ற நபருக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.