பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து அரங்கேறுவது போல, ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகள், சிறுவர்களுக்கு எதிராகவும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளும், தொந்தரவுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் அவை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை போல வெளியுலகுக்கு பெரிதளவில் தெரியாமல் போகிறது அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் பெண் என்பதால் குறைந்தபட்ச தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. அப்படியான சம்பவம் ஒன்று அமெரிக்காவின் கொலொராடோவில் நடந்தேறியிருக்கிறது.
அதன்படி 31 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்தது அம்பலமாகியிருக்கிறது. இதனால் அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறைவாசத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் கருவுற்றிருந்த நிலையில் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார்.
கொலொராடோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா செரானோ என்ற பெண் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தின் போது 13 வயதுடைய சிறுவனிடம் பழகி, அச்சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனையடுத்து ஆண்ட்ரியா ஃபவுண்டைன் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது, நம்பிக்கையை ஏற்படுத்தி சிறுவனை வன்புணர்வு செய்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் சிறுவனுடனான உறவு குறித்து விசாரணை அதிகாரிகளிடம் ஆண்ட்ரியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு சிறைவாசத்தில் இருந்த ஆண்ட்ரியா செரானோவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இதனையடுத்து ஆண்ட்ரியாவின் வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தவரிடம், செரானோவை பாலியல் குற்றவாளியாக பதிவு செய்ததெல்லாம் சரி. ஆனால் தற்போதைய நிலையில் சிறைவாசம் மட்டும் வேண்டாம் என கடந்த வெள்ளியன்று (மார்ச் 3) கேட்டுக் கொண்டிருக்கிறார்.
(பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார்)
இதனையறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார், “என் மகனின் குழந்தைப்பருவம் திருடப்பட்டிருக்கிறது. தற்போது அவன் தந்தையாகியிருக்கிறான். ஆனால், பாதிக்கப்பட்டவன் அவன்தான். இந்த வடுவோடுதான் அவன் தன் வாழ்நாள் முழுக்க வாழப் போகிறான். இதுவே என் மகன் பெண்ணாகவும், குற்றம் புரிந்தவர் ஆணாக இருந்தால் நடந்திருப்பதே வேறாக இருக்கும். இதனாலேயே அந்த பெண் மீது இரக்கம் காட்டுகிறார்கள். அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தாக வேண்டும்.” என பொறுமித் தள்ளியிருக்கிறார்.
இந்த நிலையில், செரானோ தரப்பின் கோரிக்கையை நீதிபதி ஏற்பதற்கு குறைந்தபட்ச சாத்தியக்கூறுகளே இருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையே கொடுப்பார் என்றும் அமெரிக்காவின் KKTV தளம் தெரிவித்திருக்கிறது.