அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் தரவுகளின்படி, அக். 2022 முதல் செப் 2023 வரை, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 -2020 ஆம் ஆண்டுகளில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 19,883. இந்த எண்ணிக்கையை விட தற்போது பிடிபட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கைது செய்யப்பட்டவர்களை 4 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளது அமெரிக்க அரசு. பெரும்பாலும் துணையில்லாத குழந்தைகள், குடும்பங்களோடு வரும் குழந்தைகள், குடும்பத்தோடு வருபவர்கள், வயதுவந்த தனிநபர்கள் (ஆண் அல்லது பெண்) என வகைபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தனிநபர்களே அதிகளவில் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க சுங்க எல்லை பாதுகாப்புத்துறை கூறுகையில், “இவர்களில் பெரும்பாலானோர் குஜராத், பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். சுமார் 30,000 பேர் கனடா எல்லையிலும், 41,000 பேர் மெக்சிகோ வாயிலிலும் பிடிபட்டனர்; மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தபின் பிடிபட்டவர்கள்” என தெரிவித்துள்ளது.
இது குறித்து குஜராத் அதிகாரி கூறுகையில், “பிடிபட்டவர்கள் குறைவானவர்கள்தான். இதில் ஒருவர் பிடிபடுகிறார் என்றால், 10 பேர் நுழைந்துவிட்டார்களென அர்த்தம்” என தெரிவித்துள்ளார். இப்படி உள்நுழைய முயற்சிப்பவர்களுக்கு மோசமான முடிவுகள் ஏற்பட்டிருந்தாலும் இம்முயற்சிகள் தொடர்ந்த வண்ணமாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர் அதிகாரிகள்.