ஃபேஸ்புக் பதிவில் அரசை விமர்சித்த ட்ரான் திங்கா எனும் சமூக ஆர்வலருக்கு வியட்நாம் அரசு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
வியட்நாமில் கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் அரசு, கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அரசாக அறியப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டில் போலீஸ் அராஜகம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ட்ரான் திங்கா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்டுரை ஒன்றினை எழுதினார். இதையடுத்து அரசுக்கு எதிராக அவதூறு பரப்புரை மேற்கொண்டதாகக் கூறி ட்ரானுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. வியட்நாமில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த ட்ரான் திங்காவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நான்கு குழந்தைகளின் தாயான அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. வியட்நாமில் மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறையல்ல. அரசுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாகோக் குயின்ச் எனும் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு கடந்தாண்டு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.