61 வருடங்கள் தேடி தனது 103 வயது தாயை 81 வயது மகள் கண்டிப்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லார்ந்து நாட்டில் வசிக்கும் 81 வயது மூதாட்டியின் பெயர் எய்லீன் மெக்கென். இவரது சொந்தக் கதையை வைத்து ஒரு திரைக்கதையை எழுதிவிடலாம். ஆம், சினிமாவில் வருவது போல, இவரது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. இவர் சிறுவயதாக இருக்கும்போதே குடும்பத்தை பிரிந்தவர். தளபதி படத்தில் வரும் ரஜினிகாந்த் போல. பிறந்தபோதே பிரிந்த இவர், அதன்பின்னர் வளர்ந்தது எல்லாம் அயர்லாந்தில் தான். இவருக்கு 19 வயது இருக்கும்போது, அவர் வாழும் குடும்பம் அவருடைய சொந்தக் குடும்பம் இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. அன்று முதல் தனது குடும்பத்தை தேடும் பெரும் பணியில் மெக்கென் இறங்கியுள்ளார்.
அவரது தேடல் 60 ஆண்டுகளை கடந்தும் ஓயவில்லை. தற்போது 81 வயதாகும் அவர் தனிமையில் வசித்து வருகிறார். ஆனால் இந்த தருணத்திலும் தனது சொந்தக் குடும்பத்தில் யாரையாவது (தாய், தந்தை) பார்த்துவிட முடியும் ? என்ற எண்ணம் ஆழமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அந்நாட்டின் பிரபல வானொலி தொலைக்காட்சி ஒன்றில் தனது கதையை கூறியுள்ளார். அத்துடன் தான் குடும்பத்தை பிரிந்த மருத்துவமனை ஒன்று குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு மருத்துவர் பேசியுள்ளார். அவர் “உங்கள் குடும்பத்தை எனக்கு தெரியும்” என மெக்கனிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் உரைந்த மெக்கென் அவரது உதவியுடன் தனது குடும்பத்தை தேட ஆரம்பித்துள்ளார். பல்வேறு தேடல்களுக்குப் பின்னர் தனது குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார். அயர்லாந்தின் பெதானி குடியிருப்பில் வசிக்கும் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால், மெக்கெனின் தாய் இன்னும் உயிருடன் தான் உள்ளார். அவருக்கு தற்போது 103 வயதாகிறது.
தனது தாயுடன் தொலைபேசி மூலம் பேசிய மெக்கென், “நான் உயிருடன் இருந்தது உங்களுக்கு ஏன் தெரியவில்லை. ஏன் தெரியவில்லை” என ஆழ்மனதில் இருந்து அழுகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்”. ஆனால் அவர் பேசியது எதையும் அவரது தாயால் கேட்க முடியவில்லை. வயது முதிர்வால் அவருக்கு கேட்கும் திறன் இழந்துவிட்டது. இதனால், மெக்கென் கூறியதற்கெல்லாம் அவரது தாய், “எனக்கு கேட்கவில்லை. எனக்கு கேட்கவில்லை” என பதிலளித்துள்ளார். 81 வயதாகும் மெக்கெனுக்கு ஒரு காது கேட்காது. தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து தனது தாயை சில நாட்களில் சந்திக்க மெக்கென் திட்டமிட்டுள்ளார். அதற்கான பயணத்திற்கும் அவர் தயாராகியுள்ளார்.