விபத்துக்குள்ளான Ilyushin Il-76 என்ற விமானம் 65 உக்ரேனிய போர் வீரர்கள், ஆறு பணியாளர்கள், மூன்று ரஷ்ய படைவீரர்களை ஏற்றிச் சென்றதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் பெல்கோரோட் பகுதியில் விபத்திற்குள்ளானது. இதில் விபத்தில் விமானத்தில் இருந்த 74 பேரும் உயிரிழந்தனர். போர்க்கைதிகள் பரிமாற்றத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் இத்தகைய கோர விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ilyushin Il-76 என்ற இந்தவகை விமானம் துருப்புகள், சரக்குகள், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ராணுவ விமானமாகும். விமானம் விபத்திற்குள்ளாது தொடர்பான சிறு காணொளியும் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. மாஸ்கோ நேரப்படி நேற்று காலை 11 மணியளவில் விமானம் விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின்படி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றிய நிலையில் தரையில் விழுகிறது. Ukrainskaya Pravda செய்தித்தாள் கெய்வின் ஆயுதப்படைகள்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறிய நிலையில் அதை மீண்டும் திரும்பப் பெற்றது. உக்ரைன்தான் வேண்டுமென்றே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமும் அந்நாட்டு அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரே கர்தபோலோவ் மூன்று ஏவுகணைகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.