71வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்.போனி கேப்ரியல் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2022ஆம் ஆண்டிற்கான 71வது 'மிஸ் யுனிவர்ஸ்' பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று (ஜனவரி 15) காலை 6:30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா, டொமினிகன் குடியரசு, போர்ச்சுகல், கனடா, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் இருந்து 84 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆர்.போனி கேப்ரியல் 2022ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டியில் வெனிசுலாவின் அமண்டா டுடாமெல் முதல் ரன்னர் அப் இடத்தையும், டொமினிகன் குடியரசின் ஆண்ட்ரீனா மார்டினெஸ் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் முடிசூட்டப்பட்டது. இந்தப் போட்டியில், கலந்துகொண்ட இந்தியாவைச் சேர்ந்த 25 வயதான திவிதா ராய், முதல் 5 இடங்களுக்குள் வர முடியாமல் வெளியேறினார்.
கடந்த ஆண்டு 'மிஸ் திவா யுனிவர்ஸ்' போட்டியில் வென்ற பெருமைக்குரியவரான இவர், கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசித்து வருகிறார். இந்தப் போட்டியில் அவர் தனது உடையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அதில் அவர் 'சோன் சிரியா' உடையணிந்து வந்தார்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஆர்.போனி கேப்ரியல், 1994 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் பிறந்தவர் ஆவார். வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனில் இளங்கலைப் பட்டம் பெற்ற கேப்ரியல், ஆடை வடிவமைப்பாளராக விளங்கி வருகிறார். மேலும், மாடலாகவும், தையல் பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். பள்ளியில் படிக்கும்போதே, ஆடைகளைக் கொண்டு புதிய வடிவிலான டிசைன்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட கேப்ரியல் தற்போது சொந்தமாக தனது பெயரிலேயே ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
- ஜெ.பிரகாஷ்