பிரான்ஸில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அங்கு இரண்டாவது முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரே நேரத்தில் மக்கள் பாரீஸ் நகரில் இருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதால், 700 கி. மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இங்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் நகர மக்களும், நாட்டின் பல நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருந்தவர்களும் சொந்த ஊருக்குச் செல்லும் நோக்கத்துடன் படையெடுத்ததால் சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரங்களுக்கு அணிவகுத்து நின்றன.
கொரோனா தொற்று அதிக அளவில் பிரான்ஸ் நாட்டில் ஏற்படும் நிலையில், பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக நான்கு வார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடி அறிவிப்பால் பதற்றமடைந்து மக்கள் மளிகைக் கடைகள் மற்றும் ஸ்டோர்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பெருமளவில் குவிந்துவிட்டனர்.
பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மெக்ரான், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தினமும் 50 ஆயிரம் அளவில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.