கரீபியன் நாடான ஹைதியில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்ந்தது.
ஹைதி நாட்டு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டை நாடுகள் உதவி அனுப்ப தொடங்கியுள்ளன. மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் மீட்க போராடி வருகின்றனர். சனிக்கிழமையன்று ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் கரீபியன் நாடான ஹைதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்களை இடிந்தது.
தென்மேற்கு ஹைதி, குறிப்பாக லெஸ் கெய்ஸ் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்ந்துள்ளதாகவும், மருத்துவமனைகள் 5,700-க்கும் அதிகமான காயமடைந்தவர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் ஹைதியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதியில் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது, மேலும் அந்நாட்டின் கடுமையான கும்பல் வன்முறையால் தீவிரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7 அன்று ஹைதியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸின் படுகொலைக்குப் பிறகு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதிக்கு அமெரிக்கா, டொமினிகன் குடியரசு மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகள், தேவையான உணவு மற்றும் மருந்துகளை விமானம் மற்றும் சாலை வழியாக அனுப்ப தொடங்கியுள்ளன.
11 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஹைதி கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று திங்கள்கிழமை ஹைதியில் அதிக மழை மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் (NHC) எச்சரித்துள்ளது. இதனால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.