மியான்மரில் வன்முறை பரவிய முதல் மாதத்தில் மட்டும் சுமார் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராக்கைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்து வந்த ரோஹிங்ய இன இஸ்லாமியர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது வீடுகளை தீயிட்டு கொளுத்தி, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது. இதைத் தொடர்ந்து சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய இன மக்கள் வாழ்வாதாரத்தை தேடி அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் அகதிகளாக இருக்கும் ரோஹிங்ய மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வன்முறை பரவிய முதல் மாதத்தில் மட்டும் சுமார் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 730 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 69 சதவிகிதம் பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். 9 சதவிகிதம் பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.