ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள்தொகை அடர்த்திமிக்க பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் உயிர்ச்சேதங்கள் மிக அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை 130 பேர் வரை பலியாகி இருப்பதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கனின் பக்திகா மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி கூறினார்.
நிலநடுக்கத்தின் வீரியம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாலும், அது மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளில் நிகழ்ந்துள்ளாதாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஆப்கன் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானின் உயிர்ச்சேத மற்றும் பொருட்சேத விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை..
இதே போல நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
நேற்று குஜராத்தில் ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனக் கூறப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் கெவாடியா கிராமத்திற்கு தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் இருந்ததாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.