இஸ்ரேல் நாட்டினை சுற்றி தற்போது வெடிகுண்டு சத்தங்கள் மட்டும்தான் கேட்கின்றன. ஒருபுறம் ஹமாஸ் படையினருக்கு எதிராக காசாவில் தொடர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், லெபனான் மீது திடீரென அதிரடியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு சில நிமிடங்களில் 52 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணமாக ஹிஸ்புல்லாவை குற்றஞ்சாட்டுகிறது இஸ்ரேல். அந்த அமைப்பினர் தங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதனை தடுக்கும் வகையில், ஹிஸ்புல்லாவின் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஹிஸ்புல்லா தற்போது மட்டும் தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை. இஸ்ரேல்- ஹமாஸ் இடையயான போரில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது ஏவுகணை வீசியும் வந்தது.
இப்படியான சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் நாட்டில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த புதுவிதமான எலக்ட்ரானிக்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான "மொசாட்" காரணம் என்றது ஹிஸ்புல்லா. ஆனால், அதனை இஸ்ரேல் ஒப்புக் கொள்ளவில்லை. இப்படியான சூழலில்தான், லெபனான் மீது ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, மீண்டும் ஒரு போர் உருவாகாமல் தடுக்க உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகள் இடையேயான பிரச்னை வளர விடாமல் தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.