ஸ்பெயின் நாட்டில் ஒயின் ஆலையின் பாய்லர்களிலிருந்து ஒயின் கசியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு மாகாணம் அல்பாசெட்டில் உள்ள ஒயின் ஆலையில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. பெரிய பெரிய பாய்லர்களில் அடைத்து வைக்கப்பட்ட ஒயின் திடீரென கசிவு ஏற்பட்டு படர்ந்ததால், அப்பகுதி முழுக்க சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.
இதனை, உள்ளூர் பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொட்டப்பட்ட ஒயினின் மதிப்பு 50 ஆயிரம் லிட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் திராட்சை அறுவடை செய்யும் காலம் இது. அதனால், தொழிலாளர்கள் திராட்சை அறுவடை செய்யும் பணியில் இருந்துள்ளனர். அப்போதுதான், ஒயின் கசிவு ஏற்பட்டுள்ளது. இப்படி ஒயின் கசிவது புதிதல்ல. இங்கு 50 ஆயிரம் லிட்டர்தான் கசிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் ஒயின் ஆலை ஒன்றில் மூன்று லட்சம் லிட்டர் ஒயின் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.