காங்கோ நாட்டின் சுரங்க கிணற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ, தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்தது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன.
அந்த வகையில் காங்கோவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கனடா நிறுவனத்துக்கு சொந்தமான தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், அதற்கு மத்தியிலும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இந்த தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தீவிர மீட்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கோர விபத்தில் 50 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.