ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே நடந்துவந்த போர் முடிவுக்கு வந்து நேற்று தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றனர். இதனால் அங்கு வசித்துவந்த மற்ற நாட்டினர்களை அந்தந்த நாட்டு அரசுகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. அங்கிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சார்பில் ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டு 129 பேர் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்றும் அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காபூல் விமான நிலையம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆப்கன் மக்கள் உட்பட அங்கு வசித்துவந்த பிற நாட்டினர் ஏராளாமானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்ததால் அங்கு கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் படையினர் காபூல் விமான நிலையத்துக்குள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதனைக் கைப்பற்றி தலிபான்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.