நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக, உக்ரைனின் கை ஓங்கி வருவதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விளாடிமிர் ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சர் ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை அமைச்சர் டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் ராஜினாமா குறித்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்தும் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், 4 அமைச்சர்களின் ராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.