எத்தியோப்பியா: உள்நாட்டு போரால் உணவுப்பஞ்சத்தில் தவிக்கும் 4 லட்சம் பேர்
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் நடக்கும் உள்நாட்டு போரின் காரணமாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிக மோசமான உணவு பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த எட்டு மாதங்களாக, எத்தியோப்பியா அரசாங்கத்துக்கும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் (டிபிஎல்எஃப்) இடையே நடக்கும் கடுமையான மோதலால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவ உடனடியாக மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐநா சபையின் மூத்த அதிகாரி ஒருவர் முறையிட்டார்.
டைக்ரேவில், கடந்த மாதம் கடுமையான தாக்குதலை தொடங்கிய கிளர்ச்சியாளர்கள் பிராந்திய தலைநகரான மீகேலை கைப்பற்றினார்கள். இந்த வாரம் எத்தியோப்பியன் படைகள் இரண்டு முக்கிய பாலங்களை அழித்தன. இதனால் இப்பகுதியில் கடுமையான போர்ச்சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
"இந்த உள்நாட்டு மோதலால் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1.8 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதாக சிலர் பரிந்துரைக்கின்றனர். 33,000 குழந்தைகள் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் அவர்களைச் சென்றடைந்தால் மட்டுமே இம்மக்களை காப்பாற்ற முடியும்” என ஐ.நா அதிகாரி தெரிவித்தார்.
டைக்ரேயில் பிராந்திய சக்திகளுடன் போராடி வரும் எத்தியோப்பியன் அரசாங்கம் திங்களன்று ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் யுத்த நிறுத்தத்தை மீறி இப்பகுதியில் மேலும் சண்டை நீடிப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.