குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? தொடரும் ஆபரேஷன்..!

குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? தொடரும் ஆபரேஷன்..!
குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? தொடரும் ஆபரேஷன்..!
Published on

தாய்லாந்து குகைக்குள் பல நாட்களாக தவித்து வரும் மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி இன்று தொடங்க உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மீட்புப் பணியினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய வீரர்கள்

கடந்த 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியாமல் நாடே பதற்றத்தில் ஆழ்ந்தது. ஆனால் 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் குகைக்குள்ளே பல கிலோமீட்டர் தள்ளி ஒரு சின்ன திட்டின்மீது தவித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

தாமதமான மீட்புப் பணி

ஆனால் அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாததால் மீட்புப் பணி தாமதமானது. தாய்லாந்து ராணுவமும், கடற்படையும் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவிலான செய்தியாக மாறியது. தாய்லாந்து நாட்டு வீரர்களுடன் இணைந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பலநாட்டு அனுபவம் வாய்ந்த வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 1000 வீரர்கள் தொடர்ச்சியாக பல நாட்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபடுவர்களுக்கு தன்னார்வலர்கள் பலரும் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

வீரர்களின் முயற்சியாலும், தாய்லாந்து மக்களின் பிரார்த்தனையாலும் 15 நாட்கள் தவிப்பிற்கு பின் நேற்று 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மீட்கப்பட்டது எப்படி..?

சேறு, சகதி நிரம்பிய மிகக் குறுகலான பாதை அது. ஆக்ஸிஜன் அளவும் மிகக் குறைந்த அளவில் காணப்படும். எனவே அந்த ஆபத்தான, குறுகலான, சிக்கல் நிறைந்த பகுதியில் முதலில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக 4 சிறுவர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தலா ஒரு சிறுவனை மீட்க 2 வீரர்கள் குகைக்குள் சென்றிருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் டேங்க் மட்டுமில்லாமல் சிறுவர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜன் டேங்கை தோளில் சுமந்தபடி இருண்ட குறுகலான பாதைக்குகள் சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்த 4 சிறுவர்களை மீட்டு வந்துள்ளனர். சுமார் 11 முதல் 12 மணி நேர இருள் நிறைந்த சிக்கலான பயணத்திற்கு பின் மீண்டும் அவர்கள் பத்திரமாக வெளியே வந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் சிறுவர்களுக்கு ஸ்கூப்பா மாஸ்க், ஹெல்மெட் உள்ளிட்டவற்றையும் வீரர்களே கொண்டு சென்றுள்ளனர். இருள் நிறைந்த பகுதிக்குள் தைரியமாக தங்களது உயிரையும் பணயம் வைத்து பயணம் செய்திருக்கின்றனர் வீரர்கள். மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி தாய்லாந்து நாடு முழுவதுமே காட்டுத் தீயாக பரவியது. இதனையடுத்து அனைத்து மக்களும் சிரித்த முகத்தோடு கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் மற்ற சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேஷனை சக்சஸாக முடித்த வீரர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தொடரும் மீட்புப் பணி

4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தாலும் மீதமுள்ள 9 பேரையும் மீட்பது வீரர்களுக்கு இன்னும் சவலான பணி தான். தற்போது மீண்டும் அந்த குறுகலான பகுதிக்குள் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் மற்றவர்களை மீட்க குகைகள் செல்ல தயாராக காத்திருக்கின்றனர் வீரர்கள். அனைவரையும் மீட்க இன்னும் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com