சீனாவில் சோக நிகழ்வு | அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் உயிரிழப்பு.. 43 பேர் காயம்!
சீனாவின் தெற்கு நகரமான ஜுஹாய் நகரில் விளையாட்டு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மையத்திற்கு வெளியே இன்று மாலை (உள்ளூர் நேரப்படி 7.48) 70க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த விளையாட்டு அரங்கம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச்சென்ற 62 வயதான ஃபென் என்ற நபரையும் போலீஸார்ர் கைது செய்தனர்.
சீன விமானப்படை சார்பில் நாளை பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி குஹாய் நகரில் நடைபெற உள்ள நிலையில், இச்சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், விவாகரத்து செய்ததன் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின்போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.