சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்ட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 39 பேர் நேற்று ஒரு தனியார் பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பேருந்து, மதினாவில் இருந்து 170 கிமீ தூரத்தில் உள்ள அல் - அஹல் என்ற கிராமத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 35 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும் மீட்பு படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு அல்ஹம்னா மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
இந்த கொடூர விபத்து பற்றி அறிந்த மதினா மாகாண ஆளுநரும் இளவரசருமான பைசன் பின் சல்மான் பின் அப்துல்லாஜிஸ், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.