ஆப்பிரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென நூற்றுக்கும் அதிகமான யானைகள் செத்துமடிந்தன. அதைச் சுற்றிய மர்மம் என்னவென்று தெரியாமல் வனத்துறையினர் திகைத்தனர். அதற்கான முடிவு தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இயற்கையில் உருவாகும் நச்சுக்களால் அந்த உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும் என ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மூத்த வனப்பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். “ யானைகளி்ன் அதிர்ச்சியான மரணங்களுக்குப் பின்னால், தொற்று நோய் இருப்பதில் சாத்தியமில்லை” என வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குநர் சிரில் தாவோலோ குறிப்பிட்டார்.
ஒகாவாங்கோ பன்ஹான்டில் பகுதியில் முதல் சடலங்கள் காணப்பட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் போராடிவந்தனர். முதல்கட்டமாக அது ஆந்த்ராக்ஸ் அல்லது கடத்தலால் ஏற்பட்ட மரணங்களாக இருக்கலாம் என நம்பப்பட்டது.
பின்னர் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இருந்துபெற்ற சோதனை முடிவுகளில், அது தொற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் கிடைத்ததாகக் கூறும் அதிகாரி சிரில், “எங்களுடைய முக்கிய கவனம் பரந்துவிரிந்த சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளில் காணப்படும் பாக்டீரியாவிலிருந்து இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நச்சுகளை ஆராய்வதாக உள்ளது” என்கிறார்.
கொரோனா தொற்றால் யானைகள் மரணித்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் வனப் பாதுகாவலர்களால் நம்பப்பட்டது. ஆனால் அதற்கான அடிப்படை காரணத்தைக் கண்டறியாவிட்டால், அதிக இழப்புகளைச் சந்திக்கநேரும் என்றும் அவர்கள் அச்சப்படுகிறார்கள்.
போட்ஸ்வானாவில் உள்ள சவான்னா வகை யானைகளின் எண்ணிக்கை தந்தம் வேட்டைகளால் நாளுக்கு நாள் குறைந்துவருவது வனவிலங்கு ஆர்வலர்களால் கவலையுடன் பார்க்கப்படுகிறது.