அமெரிக்காவில் 30 வருட பழமையான தேவாலயம் இந்து கோயிலாக மாற்றப்படுகிறது.
அமெரிக்காவில், விர்ஜீனியாவின் போர்ட்ஸ்மவுத்தில், 30 ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்ட சுவாமி நாராயணன் கோவில் அறக்கட்டளை, விலைக்கு வாங்கியுள்ளது.
இது குறித்து, அகமதாபாத்தில் உள்ள, சுவாமி நாராயணன் கோவில் அறக்கட்டளை மடாதிபதி, பகவத் பிரியதாஸ் சுவாமி கூறும்போது, ‘’அகமதாபாத்தில் உள்ள, சுவாமி நாராயணன் கோவில் போல விர்ஜீனியாவில் உள்ள தேவாலயம் மாற்றி அமைக்கப்படும். இந்த தேவாலயம் இருக்கும் இடம், 112 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. கோவில் பணிகள் முடிந்ததும் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்’’ என்றார்.
அமெரிக்காவில், சுவாமி நாராயணன் கோவிலாக மாற்றப்படும் ஆறாவது தேவாலயம் இது. ஏற்கனவே கலிபோர்னியா, லூயிஸ்வில்லே, பென்சில்வேனியா, லாஸ் ஏஞ்சல்ஸ், ஓஹியோ பகுதிகளிலும் தேவாலயங்கள் கோயிலாக மாற்றப்பட்டுள்ளன.