சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. அந்த வகையில், ஏர் யூரோப்பா விமானம் ஒன்று நடுவானில் குலுங்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏர் யூரோப்பா போயிங் 787-9 என்ற எண் கொண்ட விமானம் நேற்று ஸ்பெயினிலிருந்து உருகுவேவுக்குப் புறப்பட்டுச் சென்றது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் நடுவானில் பயணித்தபோது திடீரென குலுங்கியது. இதனால் 30 பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவசர நிலையை கருத்தில்கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை ஏர் யூரோப்பா மற்றும் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மேலும், அவர்களில் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் மாற்று விமானம் மூலம் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏர் யூரோப்பா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல கடந்த மே மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றும் நடுவானில் குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்ததும், மேலும் சில பயணிகள் காயமடைந்தனர் என்பதும் இந்த விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.