பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 30பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள கோச்சா ரிசால்டார் என்ற பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், வழக்கம்போல நூற்றுக்கணக்கானோர் அந்த மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மசூதிக்கு வெளியே இருந்த இரண்டு போலீஸாரை, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு உள்ளே நுழைந்தார்.
சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக, அந்த நபர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் மசூதியில் இருந்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த போலீஸாரும், பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.