இலங்கை வெடிகுண்டு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து தாக்கினர். அப்போது மனிதகுண்டு வெடித்ததில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.
இலங்கையில் நேற்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் அனைத்தும், மனிதவெடிகுண்டுகள் மூலமாகவே நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடைபெற்ற இடங்களை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கொழும்புவின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது அங்கிருந்த மனிதவெடிகுண்டு வெடித்ததில், அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த தாக்குலில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.
இதனிடையே தவறான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்ப் அப் மற்றும் வைபர் உள்ளிட்ட செயலிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதிபர் சிறிசேன வெளியிட்டுள்ள அறிக்கையில், வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயல்படவேண்டாம் என இலங்கை மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வீட்டில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், உளவுத்தகவலின் அடிப்படையில் முன்னச்செரிக்கை நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, வெடிகுண்டுகளை ஏற்றிவந்த வேன் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் 13 பேரை கைது செய்துள்ளனர்.