மும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு

மும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு
மும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு
Published on

இந்தியாவின் மும்பை நகரில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலே இதுவரை பெரிய பயங்கரவாத தொடர் தாக்குதலாக இருந்து வந்தது. ஆனால் இலங்கையில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் மும்பை தாக்குதலை காட்டிலும் மிகவும் பயங்கரமானதாக அமைந்துள்ளது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது. இந்த இரண்டு தொடர் தாக்குதல்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவை என்ன என்பது பற்றியும், இலங்கை தாக்குதல் மும்பை தாக்குதலை விட ஏன் மிக பயங்கரமானது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

மும்பை 1993 தாக்குதல்:

1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை வர்த்தக மையத்தின் கட்டடம், ஏர் இந்தியா கட்டடம், பிலாசா சினிமா தியேட்டர், சென்சுரி பஜார் ஆகிய முக்கிய பகுதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதல் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பிறகு நடத்தப்பட்டது. 

முதலில் மதியம் 1.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தை அலுவலகத்திற்கு பக்கத்தில் நிறுத்தப்பட்ட காரில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்திற்குள் பல இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மஹிம் பகுதியிலுள்ள மீனவர்கள் குடியிருப்பு பகுதி, சாவேரி பஜார், பிலாசா சினிமா, சென்சுரி பஜார், காதா பஜார், சீ ராக் விடுதி, ஏர் இந்தியா கட்டடம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் அடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தக் கோர சம்பவத்தில் சுமார் 257 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 1,400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

இந்தத் தாக்குதல் தொடர்பாக யாகுப் மேனன், முஸ்தபா டோசா, சஞ்செய் தத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் யாகுப் மேனன் கடந்த 2015ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மற்றொரு முக்கிய குற்றவாளியான முஸ்தபா டோசா மார்டைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அபு சலேம், கரிமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக ஆர்டிஎக்ஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் உலகளவில் இச்சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியதாக இருந்தது. இது மிகவும் கோர சம்பவமாகவும் அமைந்தது.

இலங்கை 2019 தாக்குதல்:

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8.45 மணியளவில் செயிண்ட் ஆண்டனி தேவாலயத்தில் முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு சில நிமிடங்களில் ஷாங்கிரி லா ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதனையடுத்து சில மணி நேரங்களில் மூன்று தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன. அங்கும் ஈஸ்டர் தின பிரார்த்தனையில் இருந்த மக்கள் பலர் உயிரிழந்தனர். 

இதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக இலங்கை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சோதனையிட சென்றப் போது பயங்கர வாதிகள் தங்களிடமிருந்த வெடி குண்டை வெடிக்கவைத்தனர். இந்தச் சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் இறந்தனர். இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த சில நேரத்தில் இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்கா அருகிலுள்ள விடுதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களும் மிக பெரிய திட்டமிடலுடன் நடத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கையில் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்ததால் வெளிநாட்டு மக்களும் அதிகளவில் இறந்துள்ளனர். 

அத்துடன் மும்பை குண்டு வெடிப்பு  தாக்குலில் வெளிநாட்டினர் யாரும் இறக்கவில்லை. ஆனால் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 36க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இறந்துள்ளனர். அதேபோல இலங்கை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. மேலும் அது தொடர்பான விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இதனால் மும்பை தொடர் தாக்குதலைவிட இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் பயங்கரமானதாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com