பிரான்ஸில், வரும் 14ஆம் தேதி அந்நாட்டுத் தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 13ஆம் தேதி புறப்பட்டுச் செல்ல இருக்கிறார்.
அப்போது, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த முன்மொழிவில் 1 இருக்கை கொண்ட 22 ரபேல் கடற்படை விமானங்கள் மற்றும் 4 பயிற்சி விமானங்கள் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இந்தியா சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே 35 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள நிலையில், மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் குறித்து மோடி பயணத்தின்போது அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மேலும், இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவின் 25ஆம் ஆண்டை முன்னிட்டு, தேசிய தின அணிவகுப்பில் அந்நாட்டுப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த அணிவகுப்பில் இந்தியாவில் 72 விமானப் படை அதிகாரிகள், 4 ரபேல் விமானங்கள், 2சி-17 குளோப் மாஸ்டர் விமானங்கள், முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் ஆகியோர் பிரெஞ்சு படையினருடன் இணைந்து பங்கேற்க உள்ளனர்.
இதற்காக, இந்திய படையினர் கடந்த 8ஆம் தேதியே பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.