ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வங்கதேசத்தில் நிலவிய கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன் உச்சக்கட்டத்தை எட்டியது. போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகர் தாகாவை நோக்கி குவிய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரச்னை தீவிரமடைந்தது.
இந்நிலையில்தான் ராணுவத்தின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை உதறிய ஷேக் ஹசீனா, தாக்காவிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தார். இந்திய வான்பரப்பில் ஷேக் ஹசீனாவின் விமானம் நுழைந்தவுடன் அந்த விமானத்திற்கு இந்தியாவின் 2 ரஃபேல் விமானங்கள் பாதுகாப்பு அளித்தவாறே பறந்துவந்தன.
இந்நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற பிறகும், வங்கதேசத்தில் கலவரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இதில் வங்கதேசத்தில் நேற்று அப்பாவி பொதுமக்கள் 24 பேரை கலவரக்காரர்கள் உயிருடன் எரித்துக்கொன்றுள்ளனர். மேலும் ஹேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷஹீன் சக்லதாருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் இடங்கள் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது.
அந்நாட்டில் சிறுபான்மையிருக்கு எதிரான வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கணக்கான இந்து வீடுகள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக பங்களாதேஷின் இந்து சங்கம் தெரிவித்துள்ளது.
டாக்காவில் உள்ள தாகேஸ்வரிக்கோயில் மீதான தாக்குதலைத் தடுக்க உள்ளூர் இந்துக்களும் முஸ்லீம்களும் பாதுகாப்பில் நிற்பதாக உள்ளூர்வாசிகள் பங்களாதேஷ் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கலவரம் தொடரும் வங்கதேசத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 6 குழந்தைகள் உட்பட 205 இந்தியர்கள் டாக்காவிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.