இஸ்ரேல் - ஹமாஸ் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போரின் கோர தாண்டவத்திற்கு அப்பாவி மக்களும், அறியா குழந்தைகளும் பலியாகி வருகின்றனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த குழந்தைகள் படுகாயங்களுடன் சாலைகளில் தஞ்சமடைந்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்து வருகிறது. தாக்குதலில் இருந்து மீளமுடியாத குழந்தைகள் பலரும் மிகுந்த அச்சத்துடன் நடுங்கியபடி பேசியது காண்போரை உறையச் செய்கிறது.
உணவு, மின்சாரம் எதுவும் இல்லாமலும் அங்கிருந்து தப்பித்து வேறு இடம் செல்ல இயலாமலும் பலரும் தவித்து வருகின்றனர். இவர்களில் அங்கே கல்வி கற்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்தியர்களும் சிக்கித் தவித்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியக்குடிகளை மீட்க, ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலமாக சிறப்பு விமானம் ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருந்தது. அதன்மூலம் அவர்களை இந்தியாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பலனாக, நேற்று இரவு இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து ஒரு கைக்குழந்தை உட்பட 212 இந்திய பயணிகள் இன்று காலை (வெள்ளிக்கிழமை) சிறப்பு விமானமானது டெல்லி வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் வரவேற்றார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுதொடர்பாக தனது x வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இஸ்ரேலில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட சுமார் 18,000 இந்தியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 200 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். நாடு திரும்பியவர்கள், உற்சாகத்தோடு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் (பென் பகுதியில் படிப்பவர்) அங்குள்ள நிலவரம் குறித்து தெரிவிக்கையில், "நாங்கள் அங்கே பாதுகாப்பாக இருந்தோம்.
இஸ்ரேலிய அரசாங்கம் எங்களுக்கென்று தங்குமிடத்தையும் வழங்கி இருந்தது. அங்கிருந்து எங்களை வெளியேற்றும் செயல்முறையும்கூட மிகவும் சுமூகமாக இருந்தது. எனவே இந்திய அரசாங்ககத்திற்கும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
இஸ்ரேயலில் பணிபுரியும் பெண் ஒருவர் தன் அனுபவம் கூறுகையில், "எங்களுக்கு அங்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் ஏவுகணைத் தாக்குதலினால் ஏற்பட்ட ஒலி மற்றும் அதிர்வுகள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கடந்த எட்டு மாதங்களாக நான் இஸ்ரேலில் இருக்கிறேன்.
அங்குள்ள மக்கள் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பும்போது அவர்கள் எங்களுக்கு வாழ்த்து கூறி இந்தியாவிற்கு வழி அனுப்பி வைத்தார்கள்” என்றுள்ளார்.
மேலும், இஸ்ரேலில் இருந்து டெல்லி திரும்பிய பெண் ஒருவர் கூறுகையில், "இந்த போர், உலக அமைதியை சீர்க்குலைப்பதாக இருக்கிறது. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் மக்கள் தெருக்களில் வேலை செய்வதில்லை. மக்கள் மிகவும் பயத்திலும் அதே சமயத்தில் கோபத்திலும் இருக்கிறார்கள்" என்றார்.