நியூசிலாந்து நாட்டின் 170 ஆண்டுக்கால நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கடந்த அக்டோபரில் 21 வயது இளம்பெண் எம்பி தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து நாட்டிலேயே 21 வயதில் எம்பியானவர் என்ற பெருமையை பெற்றுள்ள அவரது பெயர், ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க். தற்போது அவர் பேசிய உரை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை ஹக்கா நடனம், அந்நாட்டு மௌரி பழங்குடியினரின் ஆதிகால பழக்கங்களில் ஒன்று. அந்த நடனம் மற்றும் பாடலுடன் உடல் அசைவுகளை அசைத்து மைபி கிளார்க் வெற்றி முழக்கமிட்டு, தனது உரையைப் பேசி, அந்த நாடாளுமன்றத்தையே அதிரவைத்துள்ளார்.
குறிப்பாக அவர், "நாடாளுமன்றத்திற்கு வருவதற்குமுன், தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று எனக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. சரி, இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது" என தனது உரையில் பேசியது அவையில் இருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.
இதன்மூலம் ஒரே நாளில் உலகம் முழுவதும் இணையத்தில் வைரலான மைபி கிளார்க், ஹன்ட்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர். அங்கு அவர் மவோரி சமூகத் தோட்டத்தை நடத்தி வருகிறார். மேலும் தன் மக்களுக்கான உரிமைக்குரலாகவும் இருந்துவருகிறார்.
மைபி கிளார்க் தன்னை ஒரு அரசியல்வாதியாக நினைக்கவில்லை. மாறாக மவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ள ஒரு பாதுகாவலராகவே நினைக்கிறாராம். அடக்குமுறைகளைச் சந்தித்த இனமான மவோரிகளிடம் இருந்து வந்துள்ள இவர், மாவோரியின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது என்று உறுதியாக நம்புகிறார். மைபி கிளார்க் சமூக ஊடகங்களிலும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவரை, இன்ஸ்டாகிராமில் 20,000 பேர் பின்தொடர்கிறார்கள்.