ஒமைக்ரான் பாரவல் அதிகரித்து வருவதையடுத்து, அமெரிக்காவில் கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளிலேயே, உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுவதுபோல், இசைத்துறையில் கிராமி விருதுகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு பிரிவுகளில் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா ஒமைக்ரான் காரணமாக, நேரலை பார்வையாளர்கள் மற்றும் இணையத்தில் இணைந்த பார்வையாளர்களுடன், ஜனவரி 31-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருந்தது. ஆனால், அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 6 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி ரெக்கார்டிங் அகாடமி மற்றும் அதன் தொலைக்காட்சி கூட்டாளியான சி.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 31-ம் தேதி நிகழ்ச்சியை நடத்துவது, மிகவும் அபாயகரமானது என்பதால் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் மாகாணத்தின் சுகாதாரம், பாதுகாப்பு, எங்களின் கலைஞர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். இசைக் கலைஞர்கள், நேரலை பார்வையாளர்கள் மற்றும் எங்களுடன் அயராது உழைக்கும் நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் கொரோனா பாதிப்பு காரணமாக, கிராமி விருதுகள் விழா, ஜனவரி 31-ம் தேதி நடத்த திட்டமிட்டு பின்னர், மார்ச் 14 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டும் கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளநிலையில், எப்போது மீண்டும் நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவில்லை.
இதையும் படிக்கலாமே : தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பு துவங்கியது : படக்குழு வெளியிட்ட அப்டேட்