இலங்கை: அனுராதபுரத்தில் கால்நடைகளை தாக்கும் மர்ம வைரஸ் - 2,000 பசுக்கள் பாதிப்பு

கடந்த 40 ஆண்டுகளாக இதுபோன்ற நோய் தாக்குதலை காணவில்லை என்றும், முதன்முறையாக இதுபோன்ற நோய் தாக்கியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Cattle disease, SriLanka
Cattle disease, SriLankaKandha Kumar, PT Desk
Published on

அனுராதபுரம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான கறவைப் பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு ஒரு வகையான மர்மநோய் பரவி வருவதால், அன்றாடம் பால் உற்பத்திக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பசுக்களின் தோலின் மேற்பரப்பில் சாதாரண அளவிலான முடிச்சுகள் தோன்றி, அது நீர்க்கட்டிகளாக பெரிதாகி, பின்னர் வெடித்து, வெடித்த இடங்களில் இருந்து குருதியும், சீழும் வடிவதாக பால் பண்ணையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தினமும் 10 லிட்டர் பால் கறந்த மாடுகளில் இருந்து தற்பொழுது சுமார் 3 லிட்டர் பால் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பால் பண்ணையாளர்கள் தங்களது மற்ற கறவைகளை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

Cattle disease, SriLanka
Cattle disease, SriLankaKandha Kumar, PT Desk

சுமார் 40 ஆண்டுகளாக கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் கூட, கடந்த 40 ஆண்டுகளாக இதுபோன்ற நோய் தாக்குதலை காணவில்லை என்றும், முதன்முறையாக இதுபோன்ற நோய் தாக்கியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வடமத்திய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள மாகாண பணிப்பாளர் அலுவலகம் இந்த வைரஸ் நிலைமை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தபோதிலும், நோய் வேகமாக பரவுவதால், பால் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என மாகாண பணிப்பாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நாச்சதுவ பிரதேச செயலக பிரிவில் இந்நோய் அதிகமாக காணப்படுவதுடன், நாளாந்தம் அதிகளவான கால்நடைகள் பதிவாகி வருகின்றன.

அறிகுறிகள்

இது இலங்கையில் பரவிவரும் ஒரு புதிய நோயாகும். இன்றைய நாட்களில் வடமத்திய மாகாணத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயாகவும், அதேபோன்று ஒரு தொற்று நோயாகவும் இது உள்ளது. இந்த நோய் விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய் அல்ல என்று சொல்லலாம். இந்த நோயை முக்கியமாக எருமை மற்றும் மாடுகளின் தோலில் கட்டிகள் மற்றும் வீக்கங்கள் தோன்றுவதன் மூலம் அடையாளம் காணலாம். எருமைகளின் இறப்பு விகிதம் சுமார் ஒரு வீதம் முதல் இரண்டு வீதம் வரையுள்ளது.

Cattle disease, SriLanka
Cattle disease, SriLankaKandha Kumar, PT Desk

எப்படி பரவுகிறது?

தற்போதைய அதிக வெப்ப நிலையில் இந்நோய் வேகமாக பரவும் அபாயம் மிக அதிகம். இது பால் உற்பத்தியில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த நோய் முக்கியமாக உண்ணி, ஈ, கொசுக்கள் மற்றும் பூச்சிகள் மற்றும் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. விவசாயிகள் நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலமும் இந்நோய் பரவுவதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

Cattle disease, SriLanka
Cattle disease, SriLankaKandha Kumar, PT Desk

பண்ணையாளர்களுக்கு வேண்டுகோள்

பண்ணையாளர்கள் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் குறித்து தகவல் வழங்குகையில்,

  • ஆரோக்கியமான விலங்குகளை தனித்தனியாக வைத்திருங்கள் மற்றும் மற்ற பண்ணை விலங்குகளிடமிருந்து தனித்தனியாக வைத்திருங்கள்.

  • நோய் பதிவாகும் பகுதிகளில் விலங்குகளை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும்.

  • மிக முக்கியமான விஷயம் மாகாணத்திற்குள்ளும் மற்றும் மாகாணத்திற்கு வெளியேயும் சட்டவிரோத விலங்கு போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்துங்கள்.

  • இந்த நோய் ஒரு வைரஸ் நோய், எனவே குறிப்பிட்ட மாற்று மருந்து இல்லை.

  • அறிகுறிகள் கடுமையாக இருந்தால், கால்நடை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தவும்.

  • இந்நோய் தாக்கிய பசுவின் இறைச்சியை மனிதர்கள் உண்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com