55 லட்சம் சதுர கிலோ மீட்டர் படர்ந்திருக்கும் அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதுபோல அமேசான் பல்வேறு ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது.
பூமியில் 20% ஆக்ஸிஜனை வெளியிடுகிறது பிரேசில், பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இந்த அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோ மீட்டர். இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள நதி ஓடுகிறது. உலகிலேயே நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி இரண்டாம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இந்த மழைக்காட்டில் வசிக்கின்றன.
அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. இங்கு, மழை பெய்தால் கூட, அந்த மழை நீர் தரையைத் தொட 10 நிமிடங்களாகும். இதன் மூலம் அமேசான் மரங்களின் அடர்த்தியை புரிந்துகொள்ள முடியும். இங்குள்ள தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கிரகித்துக்கொண்டு, உலகளவில் 20 சதவிகிதத்திற்கும் மேலான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
இதனால் அமேசான் காடுகள் பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக பெரும்பாலான தாவரங்கள் அழிந்தன. பருவநிலை மாற்றத்தால் உலகில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் அமேசான் காடுகளில் 75 சதவிகித பகுதி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.