ட்ராசோடாமி என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மூக்கில்லாமல் பிறந்தது. ட்ராசோடாமி என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக இந்த குறையுடன் குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இதனை அந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாலும், அந்த குழந்தையை எந்த விதமான குறையையும் இன்றி வளர்த்து வந்தனர். இந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ஏலி தாம்சன் என்ற அக்குழந்தை உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 2வது பிறந்தநாளை கொண்டாடிய ஏலி தாம்சன், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தான். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தகவலை ஏலி தாம்சனின் தந்தை பதிவிட்டுள்ளார். "எங்களின் சிறிய நண்பனை இழந்துவிட்டோம். இவனது மறைவு எங்களை நீண்ட காலத்திற்கு காயப்படுத்தும், அழகிய சிறுவன் எங்கள் மகனாக பிறந்ததற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.