GREECE | ஒரு வாரமாக கட்டுக்குள் வராத காட்டுத்தீ! மீட்பு பணிக்கு சென்ற விமானம் விழுந்து 2 பைலட் பலி!
கிரீஸ் நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை காட்டுத்தீ கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ரோட்ஸ் தீவு, எவியா தீவு, கோர்ஃபு தீவு ஆகியவற்றில் கடந்த ஒருவாரத்திற்கு காட்டுத் தீ பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் காட்டுத் தீ கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.
வெப்பம் கடுமையாக அதிகரித்து, பல இடங்களில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிரீஸிற்கு சுற்றுலா வந்தவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ரோட்ஸ் தீவு மற்றும் கோர்ஃபு தீவில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.
மீட்பு பணிக்கு சென்ற விமானம் விபத்து! 2 பேர் உயிரிழப்பு!
மீட்பு பணியை துரிதப்படுத்த பிற நாடுகளின் உதவியை கிரீஸ் அரசு நாடியுள்ளது. கிரீஸில் இதே போன்று 2007 மற்றும் 2021ல் காட்டுத் தீ ஏற்பட்ட போது, ரஷ்யாவின் BERIEV BE-200 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பயன்படுத்தி அதிவேகமாக தீயை அணைக்கலாம் என அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் PANOS KAMENNOS தெரிவித்துள்ளார்.
இதனிடையே எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இருவர் உயிரிழந்தனர்.