ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாரா ஆலயத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா ஆலயம் அமைந்துள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் அந்தக் கோயிலிலுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் அந்தப் பகுதியில் வந்துக் கொண்டிருந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் குருத்வாரா கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் அங்கிருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே, கோயில் இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், காரில் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பப்பட்டு வெடிக்க செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை எந்த அமைப்பும் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினரை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.