ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏமனை நோக்கி படகுகளில் வந்த 180 அகதிகள், கடத்தல்காரர்களால் நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வறுமை, பசி காரணமாக, அந்நாடுகளில் இருந்து மக்கள் அகதிகளாக, படகுகள் மூலம் ஏமன் நாட்டிற்கு வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த புதன்கிழமை சுமார் 180 அகதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கடலில் தூக்கி வீசப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஐநா-வின் ஐஓஎம் என்ற புலம்பெயர்வோருக்கான அமைப்பு கூறுகிறது. கடற்படைகளின் படகுகள் வருவதை அறிந்து, தப்பித்துக் கொள்வதற்காக கடத்தல்காரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்கப் நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் மூலமாக வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 55000 அகதிகள் ஏமனில் குடியேறியுள்ளதாக ஐஓஎம் கூறுகிறது. மேலும், நேற்று (வியாழக்கிழமை) இதேபோல 55 இளைஞர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று ஐஓஎம் கூறுகிறது.