17 வயது சிறுவன் ஒருவன் தன்னந்தனியே சிறிய விமானத்தில் உலகைச் சுற்றி வந்து அதிசயிக்க வைத்துள்ளான்.
பல்கேரியா நாட்டின் சோஃபியாவை சேர்ந்த 17 வயதேயான மேக் ரூதர்ஃபோர்டு ( Mack Rutherford) என்ற இளைஞன் தன்னந்தனியே சிறு விமானத்தில் உலகைச் சுற்றி வந்த மிக இளம் வயது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளான். தனியாளாக உலகைச் சுற்றி வந்த இளைய நபர் மற்றும் மைக்ரோலைட் எனும் சிறு விமானத்தில் உலகைச் சுற்றி வந்த இளைய நபர் என்ற இரு கின்னஸ் சாதனைகளையும் ஒரு சேர நிகழ்த்தியிருக்கிறான் மேக் ரூதர்ஃபோர்டு. முன்னதாக 18 வயதில் தனியாளாக உலகை விமானத்தில் சுற்றி வந்த பிரிட்டனைச் சேர்ந்த ட்ராவிஸ் லட்லோவின் சாதனை இதன்மூலம் முறியடிக்கப்பட்டது.
இச்சாதனையை படைக்க சிறுவன் ரூதர்ஃபோர்டு 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை கடந்துள்ளான். இந்தாண்டு மார்ச் 23 அன்று சிறுவன் இந்த சாதனைப் பயணத்தை துவங்கி ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா பகுதி வழியாக இந்தியா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கடந்து பயணித்துள்ளான். இப்பயணத்தை முடிக்க தனக்கு 5 மாதங்கள் தேவைப்பட்டதாக கூறும் சிறுவன் ரூதர்ஃபோர்டு, தனது சாதனை தன்னைப் போன்ற சிறுவர்கள் சாதிப்பதற்கான ஊக்கமாக, தங்கள் கனவுகளை நனவாக்கும் ஊக்கமாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளான்.
உலகை சுற்றி விட்டு விமானத்தில் இருந்து தரையிறங்கியபின் சிறுவன் அளித்த பேட்டியில், “உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்! நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் அதைச் செய்யுங்கள்! கடினமாக உழைத்து உங்கள் இலக்குகளை அடைய முன்னேறுங்கள்” என்று தெரிவித்தான். சோஃபியா விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறுவன் ரூதர்ஃபோர்டை வாழ்த்தி வரவேற்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். தற்போது கல்வியில் கவனம் செலுத்தப்போவதாக ரூதர்ஃபோர்டு தெரிவித்துள்ளான்.