இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. 600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதிகளாக உள்ள சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற் கரை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென்று சுனாமி தாக்கியது. இங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த கிரகட்டாவ் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளதை அடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வர்த்தக கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்துள்ளன. இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள் ளன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 745 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மையின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புரோவோ நுக்ரோஹோ கூறும்போது, ‘’நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 30 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது’’ என்றார்.