தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் சிலருக்கு நிமோனியா பாதிப்பு..!

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் சிலருக்கு நிமோனியா பாதிப்பு..!
தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் சிலருக்கு நிமோனியா பாதிப்பு..!
Published on

தாய்லாந்தில் குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒரு சிலருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முறையான உணவின்றி சிறுவர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு கிலோ குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தாய்லாந்திலுள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது.

இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8-ம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேரும் பயிற்சியாளரும் நேற்று  மீட்கப்பட்டனர். 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து தாய்லாந்து நாட்டு மக்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.

தற்போது மீட்கப்பட்ட 13 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  இரண்டு வாரத்திற்கும் அதிகமாக சிறுவர்கள் இருளில் சரியான உணவின்றி தவித்த காரணத்தினால் தற்போது அவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சில சிறுவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு உடலின் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது. இருந்தாலும் யாருக்கும் பெரிய அளவில் உடல் பாதிப்பு ஏற்படவில்லை.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட 4 சிறுவர்களை மட்டும் தற்போது அவர்கள் குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களையும் குடும்பத்தினர் விரைவில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு தற்போது சிக்கன் மற்றும் மென்மையான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் பூரண நலம்பெற்று இன்னும் ஒரு வாரத்திற்குள் வீடு திரும்பி விடுவார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com