அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் திடீரென சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கட்டடம் சரிந்து விழுந்தது அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்புப் படையினரும் மீட்புப் படையினரும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 வயது சிறுவன் உள்பட 35 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டடம் சரிந்து விழுவதற்கு முன்பு, அதில் பலர் இருந்திருக்கலாம் என கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடலோரத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டு இந்த கட்டடம் கட்டப்பட்டதாகவும், தற்போது புனர்நிர்மாண பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.