விவசாயிகள் 110 பேரை கட்டிவைத்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் பட்டினி, பசியால் வாடும் சம்பவம் நீடிக்கிறது. இதைவிட பெரிய வருத்தமளிக்கக்கூடிய விஷயம், தீவிரவாதிகளின் ஆதிக்கம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பைப் போலவே இங்கு இருக்கும் 'போகோ ஹரம்' தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் மற்ற தீவிரவாத (அரசு சார்பு போராளிகள்) அமைப்புகளை எதிர்த்து வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நிறுவ இங்கு பல ஆண்டுகளாக 'போகோ ஹரம்' தீவிரவாத அமைப்பு முயன்று வருகிறது. இதன்காரணமாக அவ்வப்போது நடக்கும் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது 110 அப்பாவி விவசாய தொழிலாளிகளின் உயிர்களைப் பறித்துள்ளது. நைஜீரியாவின் சனிக்கிழமை வடகிழக்கு பகுதியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, அங்கு வந்த 'போகோ ஹரம்' தீவிரவாதக் குழு, விவசாயிகள் 110 பேரை கொடூரமாக கொன்றுள்ளது. சுமார் 30 ஆண்களின் தலைகளை துண்டித்தும் கொலை செய்துள்ளனர். விவசாயிகளைக் கட்டி வைத்து கொடூரமான முறையில் உடல் உறுப்புகளை அறுத்து சித்ரவதைகளைச் செய்து கொன்றுள்ளனர். மேலும், விவசாய விளை நிலங்களில் பணிபுரிந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர்கள் கடத்தியும் சென்றுள்ளனர்.
இந்த விவசாயிகள் அனைவரும் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள சோகோடோ மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். தங்கள் பகுதிகளில் நிலவும் பஞ்சம் காரணமாக, வேலை தேடி சுமார் 1,000 கிலோமீட்டர் (600 மைல்) தொலைவு பயணித்து வடகிழக்கில் பயணம் செய்து விவசாயக் கூலிகளாக வேலை பார்த்து வந்தபோது, இந்தக் கொடூர தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். ராணுவத்துக்கும், அரசு சார்பு போராளிகளுக்கும் உளவு பார்த்ததாகக் கூறி, விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை 'போகோ ஹரம்' தீவிரவாத அமைப்பு வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை இந்த மாதிரியான தாக்குதலில் குறைந்தது 30,000 பேரைக் கொன்றுள்ளனர் என்று கூறுகிறது ஒரு தரவு. சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நைஜீரியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் கல்லன் "இந்தத் தாக்குதலில் குறைந்தது 110 பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்த ஆண்டு அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான அதிவன்முறை நேரடித் தாக்குதலாகும். இந்தக் கொடூரமானதும், புத்தியில்லாததுமான செயலைச் செய்தவர்களை நீதிக்கு முன் கொண்டுவர அனைத்து முயற்சியும் செய்யப்படும்" எனக் கூறியுள்ளார். நைஜீரிய ஜனாதிபதி முஹம்மடு புஹாரி, இந்தத் தாக்குதலைக் கண்டித்து, "இந்தக் கொலைகளால் முழு நாடும் காயமடைந்துள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.