இஸ்தான்புல் விமான நிலையத்தில், நேற்று நியூயார்க் செல்லும் TK003 எண் கொண்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில், 11 வயது உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அப்போது குழந்தைக்கு உடல்நலம் முடியாததால் விமான ஊழியர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து விமானம் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஹங்கேரியின் புடாபெஸ்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மருத்துவக் குழு அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முயன்றது. இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக, அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரிகள் தரப்பு அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரத்தில் குழந்தையின் இறப்புக்கு விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நான்கரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் மீண்டும் நியூயார்க்கிற்கு புறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ”விமானியின் அவசர தகவலை அடுத்து, மருத்துவர்கள் குழு ஒன்று தயார் நிலையில் இருந்தது. விமானம் தரையிறங்கியதும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.