உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் நாட்களில் 1.1 கோடி சிறுமிகளால் வகுப்புகளுக்குத் திரும்பமுடியாத நிலை ஏற்படும் என யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசூலே காங்கோ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் கின்ஸாஷாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்ரே அசூலே, "உலகில் பல நாடுகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு, அவற்றை நிரந்தரமாக மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் 1.1 கோடி சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பமுடியாத நிலை ஏற்படும் என மதிப்பிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்புவதற்கான பிரச்சார இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களுக்கும் கல்வி கிடைக்கச் செய்வதே யுனெஸ்கோவின் முதன்மையான நோக்கம் என்றும் ஆட்ரே ஆசூலே சுட்டிக்காட்டினார்.