ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 108ஆக அதிகரித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 108 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது விமானநிலையத்தில் இருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடங்கப்பட்டுள்ளன. விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்த அமைப்பும் அதனை உறுதி செய்துள்ளது. நிலைமை மோசமடைந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.