சிங்கப்பூரில் வருகிற ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜேவும் அண்மையில் சந்தித்து பேசிய பன்முன்ஜாம் பகுதியிலேயே ட்ரம்ப் உடனான சந்திப்பு நிகழும் என தகவல் வெளியானது. ஏற்கெனவே அங்கு ஊடக வசதி இருப்பதாலும், வடகொரிய எல்லைப் பகுதிக்கு செல்லும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு ட்ரம்புக்கு கிடைக்கவிருப்பதாலும் இந்தச் சந்திப்பு அங்கு நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதன்னிடையே கடந்த திங்கள்கிழமை அன்று நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப், கொரிய நாடுகளின் எல்லைப் பகுதியில் கிம் ஜாங் உன் ஐ சந்திப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டம் இருக்கும் என்றும், மூன்றாவது நாட்டில் அது நிகழும் போது அந்த அளவுக்கு வெற்றியைக் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற ஜூன் 12ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.